தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்: தொடரும் முரண்பாடு

இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறையிலுள்ள கூட்டு ஓப்பந்தின் கீழ் கிடைக்க வேண்டிய சம்பளம் தொடர்பாக முரண்பாடு தொடர்கின்றது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்

பட மூலாதாரம், Getty Images

தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்களுக்கமிடையில் இறுதியாக செய்து கொள்ளப்பட்ட இரு தரப்பு கூட்டு உடன்படிக்கையில் ஏற்றக் கொள்ளப்பட்ட நாளொன்றுக்கு 140ரூபாய் உற்பத்தித்திறன் கொடுப்பனவை தோட்ட நிர்வாகங்கள் முன் வைத்துள்ள நிபந்தனை காரணமாக தங்களால் பெற முடியாதிருப்பதாக தொழிலாளர்களினால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

அநேகமான தோட்ட நிர்வாகங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையை மீறி நடப்பதால், தொழிலாளர்களினால் தங்களுக்குரிய சம்பளத்தை முழுமையாக பெற முடியாதிருப்பதாக பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குற்றச்சாட்டுகின்றது.

ஏற்கனவே தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 490 ரூபாய் உட்பட நாட்கூலியாக 620ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

நாளொன்றுக்கு அவர்கள் பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்தின் எடை 12 கிலோ ஆகும். அதற்கு மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துகளுக்கு மேலதிக கொடுப்பணவு கிடைக்கும்.

இறுதியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளமாக 550 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . உற்பத்தித்திறன் கொடுப்பணவு 140ரூபாய் மற்றும் ஏனைய கொடுப்பணவு அடங்கலாக நாட்கூலியாக 730 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

உற்பத்தித்திறன் கொடுப்பணவு தொடர்பாக தோட்ட நிர்வாகங்களும் தொழிற்சங்களும் முரண்பாடான போக்கை கடைப்பிடிப்பதால் கடந்த ஐந்து மாத காலமாக தொழிலாளர்கள் முழுமையான கூலியை பெற முடியாத நிலை தொடருகின்றது.

நாளொன்றுக்கு 18 கிலோ தேயிலை பறித்தால் தான் அக்கொடுப்பணவு வழங்க முடியும் என தோட்ட நிர்வாகங்கள் கூறுகின்றன.

கூட்டு ஓப்பந்ததில் 18 கிலோ பறிக்க வேண்டும் என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

''தோட்ட நிர்வாகங்கள் உற்பத்தி திறன் கொடுப்பணவு தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு இரு தரப்பு கூட்டு ஓப்பந்தத்தை மீறும் செயல்'' என பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக தொழில் அமைச்சரை சந்தித்து பேச இ. தொ. கா நேர ஓதுக்கீடு கேட்டுள்ள போதிலும் இதுவரை நேர ஓதுக்கீடு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

அமைச்சருடன் இடம் பெற உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் இல்லையேல் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாடப்போவதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்