கேப்பாப்பிலவு காணிகளை மார்ச் 4-க்குள் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தகவல்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு - பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில்ராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மார்ச் மாதம் 4 ஆம் தேதிக்குள் விடுவிப்பதற்கு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மக்களின் காணிகளை ராணுவத்தினர் கையளிக்க கோரி போராட்டம்

இருந்தபோதிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களுக்கு இது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்புக்களும் வரவில்லை எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிலவுக்குடியிருப்பில் 29-வது நாளாகவும், புதுக்குடியிருப்பில் 26-வது நாளாகவும் மக்களின் போராட்டம் தொடர்கின்றது.

திங்கட்கிழமை மாலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் காணி விடுவிப்புக்கான போராட்டம் குறித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளனர்.

அப்போது மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவமும், விமானப்படையினரும் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும், இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை மார்ச் மாதம் 4 ஆம்தேதிக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு படையதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிச் செயலாளருக்கும் ஜனாதிபதி உடனடியாகவே உத்தரவிட்டதாகவும் இரா.சம்பந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளையடுத்து, காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றியோ அல்லது அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றியோ தங்களுக்கு எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டங்கள் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்