செல்வாக்குள்ள நபர்களுக்கு சலுகை? சிறை வைத்தியர்களை இடமாற்றம் செய்ய ஆணை

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இலங்கை சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இந்த உத்தரவை சுகாதார சேவை பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்ற நபர்களுக்கு விசேட சலுகைகளை வழங்கி வருவதாக புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செல்வாக்கு பெற்ற நபர்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்படும் போது அவர்கள் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உதவியுள்ளதாக புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்கு பின்னர் சுகாதார அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்கள் தொடர்ப்பாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உப தலைவர் டாக்டர். நவீன் டி சொய்சா விடம் கேட்ட போது, இந்த இடமாற்றங்கள் சம்பந்தமாக தனது சங்கம் ஆராய்ந்து வருவதாகவும், இதனை மேற்கொள்ளும் போது சுகாதார அமைச்சு வழமையான நடைமுறைகளுக்கு அப்பால் சென்றுள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக தனது சங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே செல்வாக்கு பெற்ற நபர்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவுடன் அவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவது சம்பந்தமாக பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்