இலங்கை கிழக்கு மாகாண பட்டதாரிகளின் போராட்டம்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம்

இலங்கையில் அரச துறைகளில் வேலை வழங்கக் கோரி கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மடடக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 8வது நாளாக தொடரும் நிலையில், இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் அரச துறைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது என்றும் அதிகமானவர்களை பயிற்சி பட்டதாரிகளாக நியமனம் செய்வது தொடர்பாக கருத்துக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் முன் வைத்ததாக கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள வெற்றிடங்கள் மற்றும் பட்டதாரிகள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளால், கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் மேலும் விரிவடைந்துள்ளது;

அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் காரைதீவு விபுலானந்தர் சதுக்கத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மட்டக்களப்பு - அம்பாரை மாவடடங்களில் போராட்டத்தில் குதித்துள்ள வேலையற்ற பட்டதாரிகளின் இந்த போராட்டத்திற்கு, மாவட்ட அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை நேரடியாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்கள் போராட்டத்தின் தொடராக நகர வீதி வழியாக கறுப்பு உடைகளை அணிந்தவாறு பிரேத பெட்டியுடன் மாவட்ட செயலகம் வரை பேரணியொன்றையும் நடத்தினர்.

பேரணி முடிவில் தங்களின் பட்டதாரி சான்றிதழின் நகல் பிரதிகளை கிழித்து தீ வைக்க தயாரான வேளை, அதனை போலிஸார் தடுக்க முற்பட்டு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சில நிமிடங்கள் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது.

பேரணி முடிவில் அரச அதிபரிடம் கையளிப்பதற்கான மனுவை மேலதிக அரச அதிபர் எஸ். கிரிதரனிடம் கையளித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 7500 பட்டதாரிகள் 4 வருடங்களுக்கும் மேலாக தொழில் இன்றி இருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது;

மத்திய மற்றும் மாகாண அரச துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக இந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு, தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36லி்ருந்து 45ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே அரச துறைகளில் தொழில்புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது;

பட்டதாரி சான்றிதழ் பெற்ற தேதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு - அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்பட அதிகாரத்திலுள்ள பலரும் பட்டதாரிகளை சந்தித்து உரையாடிய போதிலும் அவர்களால் இது தொடர்பாக உறுதிமொழிகளோ உத்தரவாதங்களோ வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகள் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருகின்றன. நாடெங்கிலும் சுமார் 35 - 40 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இறுதியாக இலங்கையில் 31.03. 2011 தேதிக்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கு 2013ம் ஆண்டு அரச துறையில் வேலை வழங்கப்பட்டது.

கடந்த காலங்களை போன்று தேசிய ரீதியில் இது தொடர்பான கொள்கையொன்று அரசாங்கத்தினால் விரைவாக வகுக்கப்படுவதன் மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண முடியும். என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்