இலங்கை: அரசு அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைதான சந்தேக நபர் விடுதலை

  • 1 மார்ச் 2017

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அதிகாரியொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Image caption தூப்பாக்கிச்சூட்டிற்கு நீதிக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டாத்தின் போது

கடந்த புதன்கிழமை இரவு காணி சீர் திருத்த ஆணையகத்தின் மட்டக்களப்பு மாவட்ட துனை இயக்குநரான நேசகுமார் விமலராஜ் களுதாவளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக ஐந்து போலீஸ் குழுக்களால் சிறப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைதான இந்நபர் மாவட்ட செயலக தனியார் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றுபவர் என கூறப்படுகிறது.

சந்திவெளியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையின் போது, தான் சம்பவ தினத்தன்று கொழும்பில் தங்கியிருந்ததாக அவரால் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகின்றது.

48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த இந்நபர், இன்று புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்திய இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த காணி அதிகாரியான விமலராஜ், தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்