வெலிக்கடை சிறை மோதல் விவகாரத்தில் உயரதிகாரிகள் காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு

2012  ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது இறந்த கைதிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களை மூடி மறைக்க முயற்சித்து வருவதாக சிறை கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் உயரதிகாரிகள் காப்பாற்றப்படுவதாக குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவத்தின் போது பலியான 10 கைதிகளுக்கு தலா இருபது லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதே போன்று காயமடைந்த 20 கைதிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிறை கைதிகளின் உரிமைகளை காக்கும் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் சேனக்க பெரேரா, நஷ்டஈடுகளை வழங்குவதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

அரசு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாகவே சம்பந்தப்பட்ட கைதிகள் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இந்த தாக்குதலின் பின்னணியில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பிற்கு பொறுப்பாக கடமையாற்றிய உயரதிகாரிகள் மீதும் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவிர்த்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நஷ்டஈடுகளை வழங்குவதன் முலம் உண்மையான குற்றவாளிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வழக்கறிஞர் சேனக்க பெரேரா,  பொறுப்புக் கூறவேண்டிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெற்று வருகின்ற காரணத்தினால் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கும் திடீர் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இவ்வாறான செயல்களின் மூலம் உண்மைகளை மூடி மறைக்க முடியாதென்று மேலும் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதல் ஒன்றை மேற்கொள்ள போலீசார் சென்ற போது ஏற்பட்ட மோதல்களை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு காரணமாக சம்பந்தப்பட்ட கைதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்