இலங்கை: காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம்

  • 2 மார்ச் 2017

முல்லைத்தீவு மாவட்டம் பிலவுக்குடியிருப்பு கிராம மக்களுடைய காணிகளை விமானப்படையினர் கையளித்தது போன்று ராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளையும் கையளிக்க வேண்டும் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

பிலவுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாத காலமாக இரவு பகலாக விமாப்படை முகாமுக்கு எதிரில் போராட்டத்தை நடத்தி வந்தனர். நேற்றைய தினம் இந்தக் காணிகள், காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது,

இதனையடுத்து, அதன் அயல் கிராமமாகிய கேப்பாப்பிலவைச் சேர்ந்த 135 குடும்பங்கள் தமக்குச் சொந்தமான 480 காணிகளையும் ராணுவத்தினர் தங்களிடம் கையளிக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

யுத்தம் காரணமாக இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்ததையடுத்து, இப்பகுதியில் ராணுவத்தினரும் விமானப்படையினரும் நிலை கொண்டிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, வவனியா செட்டிகுளம் மனிக்பாம் அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த கேப்பாப்பிலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு கிராம மக்களை சூரிபுரம் பகுதியில் தற்காலிகக் குடியிருப்பை உருவாக்கி அரசாங்கம் குடியமர்த்தியிருந்தது.

ஆயினும், அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளிலேயே தங்களைக் குடியமர அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடந்த பல வருடங்களாகப் போராடி வந்தனர்.

இந்த நிலையில் பிலவுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்கள் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி முதல் இரவு பகலாகத் தொடர் போராட்டம் நடத்தி வந்ததையடுத்து, அவர்களுடைய காணிகள் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

இதனைப் பின்பற்றி கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக கேப்பாப்பிலவு மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவி சந்திரலீலா கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்