இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பு ஏற்க வலியுறுத்தி போராட்டம்

  • 4 மார்ச் 2017

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுமாறு கோரி, வவுனியாவில் ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகின்ற சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஈபிஆர்.எல்.எப் கட்சியினர் சனிக்கிழமை கவனர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

வவுனியா சுற்று வட்ட வீதியிலுள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இருந்து அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் என பெருமளவிலானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு கடந்த ஒன்பது வருடங்களாகக் குரல் கொடுத்து வந்துள்ள போதிலும், அதனை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.

இருபதாயிரம் பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெயர்ப் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இந்தக் கவன ஈர்ப்புப் பேரணியின் மூலம் ஈபிஆர்எல்எப் கட்சி கோரியிருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைக் கைவிட்டு, மனிதாபிமான பிரச்சனையாகிய இதற்கு உடனடியாக அராசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

நிலைமாறு காலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாவதற்கும், இதுவே வழிவகுக்கும் என்று ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என பொறுப்பு கூறுமாறு கோரி நாளாந்தம் ஆயிரம் கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டறியும் சங்கத்தின் அழைப்பில் நடைபெற்று வருகின்ற இந்த உண்ணாவிரதப் போராடட்டத்தி;ற்கு பல்வேறு பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதே போன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியிலும் ஒரு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்