இலங்கை ஜனாதிபதி யாழ் விஜயம்: சந்திக்க முடியாததால் மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை சந்திப்பதற்காக வீதியில் காத்திருந்த, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனுமதி கிடைக்காததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
படக்குறிப்பு,

சாலையில் அமர்ந்து மறியல்

ஜனாதிபதி குழுவினர், மாற்று வழியின் ஊடாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றதனால், அவரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியிடம் மக்கள் குறைகளை நேரடியாகத் தெரிவிப்பதற்கான மக்கள் குறைகேள் அலுவலகத்தை வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பிக்கையோடு வாக்களித்து தெரிவு செய்தார்கள். ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். இப்போது பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் உணவிரத போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சொந்தக் காணிகளுக்காகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன." என தெரிவித்தார்.

படக்குறிப்பு,

தடுக்கும் போலீசார்

வேலையில்லா பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வழங்க கோரி ஆறாவது நாளாக யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை ஆறுமாதத்தில் விடுவிப்பதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை நினைவுபடுத்திய மாவை சேனாதிராஜா, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதையும் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இது தொடர்பான அமைச்சு தங்களுடன் போதிய அளவில் ஒத்துழைப்பதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்துகின்ற பட்டதாரிகளுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததுடன், அமைச்சர்கள் ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தமது அமைச்சுக்களின் ஊடாக மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப் போவதாகவும் கூறினார்.

படக்குறிப்பு,

காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களுடன் பெண்கள்

முந்தைய ஆட்சியைப் போலல்லாமல், தன்னுடைய ஆட்சியில் மக்கள் பயமில்லாமல் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்த முடிகின்றது. கோஷங்களை எழுப்ப முடிகின்றது. அவ்வாறு செய்வதைவிட அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆயினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் குறித்தோ அவர்களுடைய ஆர்ப்பாட்டங்கள் குறித்தோ ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் பலாலியில் இராணுவத்தினர் மத்தியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் அபிப்பிராயத்திற்கமைய நாட்டை நிர்வகிக்கப் போவதில்லை என தெரிவித்ததுடன், ஆயுதப்படைகளுக்கு எதிராக எந்தக் குற்றப்பத்திரமும் முன்வைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்