காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பேற்க கிழக்கு மாகாணத்திலும் போராட்டம்

  • 5 மார்ச் 2017

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்பு கூறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் கிழக்கு மாகாணத்திலும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Image caption காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி கிழக்கு மாகாணத்திலும் போராட்டம்

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

ஏற்கனவே, இந்த கோரிக்கையை முன்வைத்து வடக்கில் கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Image caption வடக்கில் கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் ஏற்கெனவே நடைபெற்று வருகிறது

அந்த போராட்டத்தை வலுப்படுத்தவே தாங்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாக கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு படையினரிடம் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும், வேறு சந்தர்ப்பங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் பெண்கள் உட்பட பலர், போர் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்களால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Image caption வடக்கு மாகாணத்தில் நடைபெறும் பேராட்டத்தை வலுபெற செய்யவே கிழக்கு மாகாணத்திலும் போராட்டம்

முந்தைய அரசாங்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்திடமிருந்து ஏதாவது தகவல் கிடைக்குமென எதிர்பார்த்திருந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்