இலங்கையில் டால்ஃபின்களை கொன்ற கட்டு வலை உரிமையாளர்களின் மீன்பிடி அனுமதி ரத்து

இலங்கையின் கிழக்கு கடலில் டால்ஃபின் மீன்களை கொன்ற சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டு வலை உரிமையாளர்களின் மீன்பிடி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மித்த கடல் பகுதியில் கட்டு வலை மீன்பிடி அனுமதி பெற்றிருந்த மீனவர்களின் வலைகளில் 12 டால்ஃபின்கள் சிக்கி அகப்பட்டுள்ளன. வலையில் சிக்கிய டால்ஃபின்களை மறைத்து கடலில் மிதவைகளில் கட்டி வைத்துள்ளனர்.

நீண்ட நேரமாக படகொன்று கரை திரும்பாமல் கடலில் காணப்படுவதை அவதானித்த துறைமுக போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்த வேளை இறந்த நிலையில் டால்ஃபின்களை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் உள்ளுர் மீனவர்கள் 9 பேர் கைதாகி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு, குறித்த டால்ஃபின் வகை மீன்களின் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக கூறுகின்றது

விசாரணைகள் நிறைவடையும் வரை கட்டு வலை உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கடற்பகுதியில் அதிகளவில் டால்ஃபின்கள் உயிர்வாழ்வதுடன், அங்கு மீன்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்