சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டணி கட்சித் தலைவர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் உயர் மட்ட குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்றது.

மனித உரிமை மீறல் விடயங்களுக்குப் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பிலான ஐநா மனித உரிமைப் பேரவை விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயத்தில் அரசாங்கம் கொண்டுள்ள கடும்போக்கு நிலைமையில் அதற்கு மேலும் கால அவகாசம் கோரப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில் வவுனியாவில் கூடியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்