ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற அவகாசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடு

  • 11 மார்ச் 2017

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்க வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சி இந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபைகளின் உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது குறித்து நீண்ட நேரம் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இறுதியில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அந்தத் தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைப் பேரவையால் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை, ஐநா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து நற்பேறுகளும் கிடைக்கும் வண்ணமாக, சர்வதேச பொறிமுறைகளை ஐநா மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, ஈபிஆர்எல்எஃப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் இந்தத் தீர்மானத்தோடு, தங்களுடைய கட்சி உடன்படவில்லை என்பதைத் தெரிவித்தார். அதையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம் என சுமந்திரன் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஆர்எல்எஃப் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்பொழுதே, இந்தத் தீர்மானத்தைத் தமது கட்சி எதிர்த்து அதற்கு உடன்படவில்லை என தெரிவித்ததாகவும் கூறினார்.

இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசம வழங்கக்கூடாது எனக் கோரி தங்கள் கட்சி உட்பட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 9 உறுப்பினர்கள் ஐநா மனித உரிகைமள் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியிருக்கின்ற நிலையில், அதற்கு முரணான வகையில் அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிவசக்தி ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அத்துடன் தமது கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இநதக் கூட்டத்திற்கு அழைக்கப்படாத காரணத்தினால், கட்சித் தலைவருடனும், க.ட்சியின் மத்தியகுழுவிலும் இது விடயமாக விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்