திஸ்ஸ அத்தநாயக்க வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ரணில் மற்றும் சிறிசேனவுக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழுப்பு மேல் நீதிமன்றம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்குக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நீதிமன்றத்தில் ஆஜராக ரணில் மற்றும் சிறிசேனவுக்கு உத்தரவு

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியிலிருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவை தெரிவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

அச்சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ரகசிய ஒப்பந்தமொன்று இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக போலியான ஆவணமொன்றை காண்பித்ததன் மூலம் அவர் இனவாதத்தை தூன்டியதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

Image caption திஸ்ஸ அத்தநாயக

சம்பந்தப்பட்ட வழக்கு இன்று திங்கள்கிழமை அழைக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த அரசு தரப்பின் வழக்கறிஞர், இந்த வழக்கை முன்கொண்டு செல்ல பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் சாட்சியங்களை பதிவு செய்வது அவசியமென்று தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ பணிகள் காரணமாக தங்களுக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதென்றும் நீதிமன்றத்தில் ஆஜராக வேறொரு தினத்தை பெற்றுத் தருமாறு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசு தரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி சாட்சியங்களை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்