இலங்கை: பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து புதிய தகவல் வெளியீடு

  • 20 மார்ச் 2017

கடந்த ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கூர்மையான விசேட ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக கல்கிசை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் போலீசார் மருத்துவ அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லசந்த விக்ரமதுங்கவின் கொலை குறித்து புதிய தகவல் வெளியீடு

துப்பாக்கி சூடு காரணமாகவே லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் உடல் மருத்துவர்களினால் பரிசோதிக்கப்பட்டது.

இன்று திங்கள்கிழமை இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி கூர்மையான விசேட ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டதன் காரணமாக லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த போலீசார் ராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் இயங்கிய குழுவொன்றினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தகவல் வெளிவந்துள்ளதாகவும் அறிவித்தனர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லசந்த விக்ரமதுங்க தனது அலுவலகத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது தெஹிவளை பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

லசந்த விக்ரமதுங்க முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்