இலங்கை: 2-ஆவது மாதமாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

  • 22 மார்ச் 2017

இலங்கையில் அரசு சேவைகளில் தங்கள் தகுதிக்குரிய பணி வழங்க கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டதிற்கு ஒரு மாத காலமாகியும் தீர்வு கிட்டாத நிலையில், இன்று (புதன்கிழமை) இரண்டாவது மாதமாக போராட்டம் தொடர்கிறது.

இலங்கை : வேலையற்ற பட்டதாரிகளின் போராட்ட குழுவினர் மீது போலீஸ் வழக்கு

Image caption போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள்

கடந்த மாதம் இதே நாளில் மட்டக்களப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது திருகோணமலை மற்றும் அம்பாரை ( காரைதீவு ) என விரிவடைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் இன்று புதன்கிழமை தபால் நிலையம் வரை பேரணியொன்றை நடத்தினர்.

இந்த பேரணியின் முடிவில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு நூற்றுக்கணக்கான தந்திகள் தனித் தனியாக பட்டதாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை: மூன்றாவது வாரமாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு நகரின் மத்தியில் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு இன்று புதன்கிழமை வருகை தருமாறு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை வேலையற்ற பட்டதாரிகள் கேட்டிருந்த போதிலும் எவரும் வருகை தரவில்லை.

Image caption கைக்குழந்தையுடனும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

தங்கள் பிரச்சனைக்கான தீர்வு குறித்து இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அழைப்பு அவர்களால் விடுக்கப்பட்டிருந்தது.

மத்திய மற்றும் மாகாண அரச துறைகளில் தேர்வு இன்றி தொழில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த போராட்டத்தில் முதன்மை கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கும் வகையில் வயது எல்லை தற்போதைய 36 வயது எல்லை 45 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மற்றுமோர் கோரிக்கையும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

வயது மற்றும் பட்டம் பெற்ற சான்றிதழ் மூப்பு அடிப்படையில் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தமது கோரிக்கையாக முன் வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு சிலரை தவிர அநேகமானோர் கலைப் பட்டதாரிகள் என மாகாண சபையில் பதிவான தரவுகள் மூலம் அறியமுடிகின்றது..

Image caption ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டத்தில் பட்டதாரிகள்

மாகாண பாடசாலைகளில் கணித , விஞ்ஞான மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு பற்றாக்குறை இருப்பதாக மாகாண கல்வி அமைச்சகம் கூறுகின்றது.

பட்டதாரிகளின் போராட்டம் குறித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பு பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கும், மத்திய அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக கணிசமான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் என மாகாண முதலமைச்சரால் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையை தாங்கள் ஒரு கண்துடைப்பாகவே கருதுவதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் உள்பட மாகாண அமைச்சர்கள் எவரும் தங்களை இதுவரை சந்திக்காதது குறித்து அவர் விசனமும், கவலையும் வெளியிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்