நாய்களை பொது இடங்களில் விட்டுச் செல்வோருக்கு சிறைத்தண்டனை விதிக்க திட்டம்

  • 23 மார்ச் 2017

இலங்கையில் நாய்களை தெருக்களிலும், பொது இடங்களிலும் விட்டுச் செல்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் 1901-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவையில் யோசனையொன்றை முன் வைத்திருந்தார்

'' கட்டாக்காலி நாய்களின் பிரச்சனை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால் குறித்த பிரச்சினைக்கு தீர்வாக பொது இடங்களில் நாய்களை விட்டுச் செல்லும் குற்றத்தின் பேரில் குற்றவாளியாகும் ஒருவருக்கு 25,000 ரூபாக்கும் மேற்படாத தொகை அபராதம் அல்லது 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளையும் விதிப்பதற்கு ஏதுவான முறையில் 1901-ஆம் ஆண்டு 25-ஆம் இலக்க நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்யப்பட வேண்டும். '' என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான சட்ட வரைவை மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்களின் ஆவோசனைகளை பெறுவதற்கான அங்கீகாரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருக்கு வழங்கியது.

இலங்கையில் தெருக்களிலும் பொது இடங்களிலும் விட்டுச் செல்லப்படும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் நாளும் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக வீதி விபத்துக்கள் , நாய்க்கடி உட்பட பல்வேறு பிரச்சனைகளை பொது மக்கள் எதிர்கொள்கின்றார்கள். உத்தேச சட்ட திருத்தம் மூலம் இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்