இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம்: மனித உரிமை ஆணையர் வலியுறுத்தல்

  • 22 மார்ச் 2017

இலங்கையில் போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஐநா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை குறித்த விவாதம் புதன்கிழமை ஜெனிவாவில் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் நடந்தது. அதில், இலங்கை அரசு தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.

Image caption ஐநாவின் மனித உரிமைகள் பேரவை (கோப்புப் படம்)

இக்கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹர்ஷ டிசில்வா கூறுகையில், ''மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றி, மக்களுக்கு பயணிக்கும் வகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட நாங்கள் உறுதி பூண்டுள்ளளோம்'' என்று தெரிவித்தார்.

''மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக உள்ளன'' என்று கூறிய ஹர்ஷ டிசில்வா, எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணமும் முழுமையானது இல்லை என்று இந்த கவுன்சில் நன்கு அறியும். எந்த நாட்டிலும் இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

''கடந்த காலத்தில் இலங்கையில் மக்கள் மிகவும் சிரமமமான மற்றும் துயரமான காலகட்டத்தை சந்தித்துள்ளனர்'' என்று குறிப்பிட்ட ஹர்ஷ டிசில்வா, ''அவர்களின் துயர்துடைக்க நிறைய பணிகள் நடந்திருந்தாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்ரமசிங்கவின் தலைமையில் பொறுப்பான ஓர் அரசாங்கமாக நாங்கள் இப் பணிகளை செய்து முடிப்போம்'' என்று உறுதியளித்தார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைBRITISH TAMIL FORUM
Image caption இறுதிப் போரில் மிக மோசமான போர்க்குற்றங்கள் நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

இது தொடர்பாக நாங்கள் அனைத்து அறிக்கைகளையும் கவனமாக படிப்போம், அனைத்தையும் தெளிவாக ஆராயுந்து, மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், பொருளாதார வளம் மிக்க நாடாகவும், தன்னிசையான மற்றும் மக்களின் உரிமைகளை பேணும் நாடாக இலங்கை உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஹர்ஷ டிசில்வா மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என்று தனது உரையில் ஹர்ஷ டிசில்வா குறிப்பிட்டார்.

அமெரிக்கா கருத்து

இது தொடர்பான விவாதத்தில் பேசிய அமெரிக்கப் பிரதிநிதி, புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்துவதில் இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

ராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்ற அவர், ஐநா. மனித உரிமைக் கவுன்சிலின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா உள்பட பெரும்பான்மையான நாடுகள் வலியுறுத்தின.

ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதி பேசுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், அங்கு ராணுவத்தின் இருப்பைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கனடா பிரதிநிதி பேசுகையில், கால வரையறைக்குட்பட்டு, ஐநா மனித உரிமை ஆணையர் அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மனித உரிமை ஆணையர் பேச்சு

ஐநா மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹூசைன் இறுதியாகப் பேசுகையில், தான் அளித்த அறிக்கையின்படி இலங்கை அரசு ஆற்ற வேண்டிய செயல்கள் இன்னும் ஏராளமாக இருப்பதாகத் தெரிவித்தார். சர்வதேச நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்த கருத்துக்களை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்