இலங்கை நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரித்தால் நீதியை எதிர்பார்க்கமுடியாது என இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம்

படத்தின் காப்புரிமை FACEBOOK

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். இந்த ஆண்டு தற்போது நடைபெறும் வருடாந்திர மனித உரிமை ஆணைய கூட்டத்தில் புதன்கிமை பேசும்போதும் அவர் அந்தக் கருத்தை வலியுறுத்தினார். பல்வேறு உலக நாடுகளும் அதை வலியுறுத்தியுள்ளன.

இந் நிலையில், இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த செல்வம் அடைக்கலநாதன், ''போர்க் குற்றங்களை விசாரிக்க அரசு எந்த வித நடவடிக்கையையும்எடுக்காத சூழல்தான் இலங்கையில் உள்ளது. உள்ளூர் நீதிபதிகளை கொண்டு போர்க் குற்றங்களை விசாரிப்பதாக அரசு சொல்வதில் எந்தவித நம்பிக்கையும் இல்லை,'' என்றார்.

''நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆதாரம் இருந்தும் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது போல பல விஷயங்களை எங்களால் சொல்லமுடியும். உள்ளூர் நீதிமன்றங்களில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் கலப்பு நீதிமன்றம் தேவை என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்,'' என்றார் செல்வம் அடைக்கலநாதன்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் வெளியுறவு துறை கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான வசதி அரசியலமைப்பில் இல்லை என்று தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு, ''முதலில் ஐ.நா .சர்வதேச நீதிபதிகள் கொண்ட அமர்வு போர் குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று கூறியபோது அரசு அதை எதிர்க்கவில்லை. அப்போது இது போன்ற காரணங்களை கூறவில்லை, ஐநாவின் தீர்மானத்தை ஏற்று அதை நடத்துவதாக ஒத்துக்கொண்டது. தற்போது புதிது புதிதாக காரணங்களை தேடுகிறது,'' என்றார்.

புதிய அரசியல் அமைப்பு தற்போது தயாராகி வருகிறது என்றும் அதில் அரசாங்கம் கலப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான உரிய சட்டப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்