ராணுவ ஆக்கிரமிப்பில் இலங்கை இஸ்லாமிய பள்ளிவாசல்?

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பகுதியில் முஸ்லிம்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலம் என கருதப்படும் கரிமலையூற்று பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Image caption 2014ம் ஆண்டு காணி விடுவிக்கப்பட்ட வேளை ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்

கரிமலையூற்று பகுதியில் 4. 65 ஹெக்டெயர் பரப்பளவு காணி பாதுகாப்பு அமைச்சின் தேவை கருதி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரினால் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

''பிரதேச செயலாளரின் இது தொடர்பான அறிவித்தல் பள்ளிவாசல் அமைந்துள்ள காணியிலும் ஒட்டப்பட்டுள்ளது '' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்.

''பிரதேச செயலாளரின் அறிவித்தலின்படி இது தொடர்பான ஆட்சேபணை எதிர்வரும் 30ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . அதற்கு முன்னதாக மத்திய காணி அமைச்சில் ஆட்சேபணை முன் வைக்கப்படும் '' என்றும் அவர் தெரிவித்தார்..

போர்க் காலத்தில் கரிமலையூற்று பகுதியில் இராணுவ பாதுகாப்பு வலயமாக ஒரு பகுதி காணி அடையாளமிடப்பட்டது. பள்ளிவாசல் காணியையும் உள்ளடக்கியதாக அந்த காணி எல்லையிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக வெளியார் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டமையால் வழிபாடும் தடைப்பட்டிருந்தது.

அந்த பகுதியில் 2014-ஆம் ஆண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் பழமைவாய்ந்த பள்ளிவாசலும் அகற்றப்பட்டது. இதனையடுத்து அவ்வேளை இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இந்த சம்பவத்தை நினைவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ''முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி 2014 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பள்ளிவாசல் காணியை விடுவிக்க முடிந்தது '' என்கின்றார்..

''2ம் உலக மகா யுத்தத்தின் பின்பு பழமைவாய்ந்த பள்ளிவாசல் என கருதப்படும் கரிமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காணி உரிமை தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்கயும் கொண்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு அரசின் நிதி உதவி பெற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது '' என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு இராணுவ பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பள்ளிவாசல் காணிக்குள் முஸ்லிம்கள் வழமை போல் நடமாடுகின்றனர். தொழுகையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் இதுவரை பள்ளிவாசல் நிர்மாணப்பணிகள் எதுவும் இடம் பெறவில்லை.

2014 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் விடுவிக்கப்பட்ட பள்ளிவாசல் காணியில் புதிதாக பள்ளிவாசல் நிர்மாணம் செய்து தரப்படும் என இராணுவ தரப்பினால் அவ்வேளை முதலமைச்சராக பதவியில் இருந்த நஜீப் ஏ மஜித் ஊடாக உறுதியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டிருந்தன. இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை என உள்ளுர் முஸ்லிம்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்