இலங்கையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

  • 28 மார்ச் 2017

இலங்கையில் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்த வருடம் 3 மாத காலத்தில் பெண்கள் ,சிறுவர்கள் உட்பட சுமார் 24 ,600 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். டெங்கு என சந்தேகிக்கப்படும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது.

நாளை புதன்கிழமை தொடக்கம் அடுத்த மாதம் 5ம் திகதி வரை நாடு தழுவியதாக சுகாதார அமைச்சினால் டெங்கு ஓழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

.கொழும்பு , கம்பகா , மட்டக்களப்பு , திருகோணமலை , அம்பாரை மற்றும் யாழ்ப்பாணம் உட்பட 12 மாவட்டங்கள் சுகாதார அமைச்சினால் டெங்கு அபாய மாவட்டங்களாக சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இம் மாவட்டங்களிலே 3 மாதங்களில் 24 ,652 பேர் டெங்கு நோயாளர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகின்றது.

தேசிய ரீதியாக ஒரு வருட காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தில் போலிஸ் , முப்படை , பள்ளிக்கூட மாணவர்கள் , சமூக அமைப்புகள்' உட்பட பல்வேறு தரப்பினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு மாணாணங்களில் யாழ்ப்பாணம் , திருகோணமலை , அம்பாரை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலே 5 ஆயிரத்திற்கும் மேல் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை - 2680 பேர் , மட்டக்களப்பு -960 பேர் , கல்முனை - 827 பேர் , அம்பாரை - 112 பேர் என மாகாணத்தில் 4580 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் கே. முருகானந்தம் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் பதிவாகியுள்ள 12 மரணங்கள் உள்ளிட்ட 15 மரணங்கள் பதிவாகியுள்ளது.இதனைத் தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவரது தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்