இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

  • 7 ஏப்ரல் 2017

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது.

சிகிச்சை பெற வந்தவர்களில் சுமார் 350 பேர் வரை வைத்தியசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தற்போது 75 - 80 பேர் வரை தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார் மாகாண சுகாதார சேவைகள் துனை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் இடம்பெற்ற வருடாந்த கந்தூரி நிகழ்வில் பிரதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி சமீபத்திய பிரதேச முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

மாட்டிறைச்சி மற்றும் நெய் கலந்த கந்தூரி சோறு இவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த உணவை உட் கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தூரி உணவு உட் கொண்டவர்களிடம் வாந்தி, மயக்கம் , தலையிடி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 4 மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் 3 மரணங்கள் மட்டுமே உணவு விஷமானதால் ஏற்பட்ட மரணங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டோரின் வாந்தி . குருதி, மலம் மற்றும் உட் கொண்ட உணவு மாதிரிகள் ஆகியன பெறப்பட்டு இரசாயன மற்றும் உயிரியல் பகுபாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது"என்றும் அவர் கூறுகின்றார்..

''நோயுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சம்பவத்திற்கு முதல் நாள் மாலை சமைக்கப்பட்டு பொதியிடப்பட்டு மறுநாள் காலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றுக்குள்ளாகி உணவு நஞ்சாகியிருக்கலாம்" அவர் குறிப்பிடுகின்றார்.

இறக்காமம் , சம்மாந்துறை , அக்கரைப்பற்று , கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவியதாக அரச மருத்துவர்கள் முழுநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் குறித்த வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் பணிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்