`கந்தூரி உணவு விஷமானதற்கு பாக்டீரியா காரணம்': பரிசோதனை முடிவில் தகவல்

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் இஸ்லாமிய வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு விஷமடைந்தமைக்கு ஒரு வகை பாக்டீரியாவே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இறக்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவு உண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவத்தில் நோயுற்றவர்களின் இரத்தம் , வாந்தி மற்றும் மலம் என்பன மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது அதனை உறுதி செய்ய முடிந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன் கூறுகின்றார்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் சென்ற வாரம் நடைபெற்ற சமய நிகழ்வின் போது மாட்டிறைச்சி கலந்த சோறு கந்தூரியாக வழங்கப்பட்டிருந்தது.

இதனை உட் கொண்ட பெண்கள் , குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் அயல் பிரதேச வாசிகள் நோயுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இரு பெண்கள் உட்பட மூவர் மரணமடைந்தனர். தலையிடி ,மயக்கம் , வாந்தி மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் இவர்களிடம் காணப்பட்ட நிலையில் உணவு நஞ்சானதே இதற்கு காரணம் என வைத்தியர்களினால் அவ்வேளை தெரிவிக்கப்பட்டிருந்தது.

நோயுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சமைத்த மாதிரி உணவு கிடைக்காத நிலையில் நோயுற்றவர்களின் வாந்தி , மலம் மற்றும் குருதி ஆகியன கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. உணவு விஷமடைய ஒரு வகை பாக்டீரியாவே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறும் மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன்.

''மக்கள் உட் கொண்ட இறைச்சியிலே இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்.'' என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாரால் பள்ளிவாசல் நிர்வாகம், சமையல் ஆட்கள் மற்றும் சமையலுக்கு உதவி , ஒத்தாசை வழங்கியவர்கள் உள்ளிட்ட 25ற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. சமையல்காரர் இருவர் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்