அரசு துறைகளில் வேலை கோரி பட்டதாரிகள் போராட்டம்

இலங்கையில் அரச துறைகளில் பணி வழங்கக்கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தமிழ் புத்தாண்டு தினமாகிய இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்கின்றது.

அரசு துறைகளில் வேலை கோரி பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்பு நகரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண் பட்டதாரிகள் சாலையோரத்தில் நின்று தலையில் மருத்து நீர் வைத்தல் , புது வருட அனுஷ்டானங்களை கடைப்பிடித்தனர்.

மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் தேர்வு இன்றி தொழில் வழங்கப்பட வேண்டும், அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள 36 வயது உச்சவரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் மற்றும் வயது மற்றும் பட்டம் பெற்ற சான்றிதழ் மூப்பு அடிப்படையில் தகுதியுடைய பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் பட்டதாரிகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம் முன் வைத்து அதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கும் மேலாக கிழக்கு மாகாணம் தழுவிய அளவில் இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த போராட்ட காலத்தில் மத்திய அமைச்சர்கள் , மாகாண அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் வருகை தந்து போராட்டக்காரர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றனர்..

ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் உட்பட போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக் கொண்ட அவர்கள் அவர்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொழில் வாய்ப்பு தொடர்பாக ஏற்றுக் கொள்ளக் கூடிய உறுதிமொழியோ அல்லது உத்தரவாதமோ அவர்களிடமிருந்து பட்டதாரிகளுக்கு கிடைக்காத நிலையில் போராட்டம் தொடருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் 50 நாட்களையும் தாண்டி 53-ஆவது நாளாகவும் அம்பாரை மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் 47வது நாளாகவும் தொடர்கின்றது .

கிழக்கு மாகாண சபைக்கு அண்மித்த திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 44வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 5000 வேலையற்ற பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் பணி உட்பட மாகாணத்தில் 4000 மேற்பட்ட வெற்றிடங்கள் அம் மாகாணத்தில் காணப்படுவதாகவும் அந்த அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் தேர்வு நடத்தப்பட்டபோது பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் உரிய புள்ளிகளை பெற்றிருக்காத நிலையில் தெரிவாகும் வாய்ப்பை இழந்திருந்தனர்.

கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாட ரீதியான வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான பட்டதாரிகள் இல்லை என கிழக்கு மாகாண சபை கூறுகின்றது.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாகாணத்திலுள்ள பணி வெற்றிடங்கள் பற்றிய விபரங்கள் பிரதம மந்திரியின் கவனத்திற்கு ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவிக்கின்றது

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரையில் அதிகாரத்திலுள்ளவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதே பொதுவாக வேலையற்ற பட்டதாரிகளின் ஆதங்கமாக காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே புத்தாண்டு தினத்திலும் தொழில் உரிமைக்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை தங்களுக்கு துக்க தினமாகவே கருதும் வேலையற்ற பட்டதாரிகள் மலர்ந்துள்ள புத்தாண்டில் தங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் .

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்