கரிநாளாக கடைபிடிக்கப்பட்ட தமிழர் புத்தாண்டு தினம்

சித்திரை மாதத்தின் தமிழ், சிங்கள வருடப் பிறப்பையொட்டி வடபகுதியில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போதிலும், இம்முறை இந்த வருடப்பிறப்பு தினம் அமைதியான முறையிலேயே கொண்டாடப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக்கோரி வவுனியாவில் 50 ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வழமையாக அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதுடன், மக்கள் குதூகலமாக ஆலயங்களில் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர். ஆயினும் அந்த உற்சாகத்தை இம்முறை வடபகுதியில் மக்கள் மத்தியில் காண முடியவில்லை.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக்கோரி வவுனியாவில் 50 ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சித்திரை வருடப் பிறப்பையும் பொருட்படுத்தாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து வவுனியா நகர வீதிகளில் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பிய வண்ணம் பேரணியாகச் சென்றனர்.

வவுனியா கந்தசாமி கோயிலில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி கடைவீதிவழியாக போராட்டம் நடத்தப்படும் இடம் வரையில் சென்று முடிவடைந்ததுடன் கண்ணீர் சொரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கோரி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராமத்தில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த ஊர் மக்கள், சித்திரைப் புத்தாண்டு தினத்தை கறுப்பு உடையணிந்து கரிநாளாக அனுஷ்டித்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வேலைகோரி போராட்டம் நடத்தி வருகின்ற வேலையற்ற பட்டதாரிகளும் இன்றைய தினத்தை கரிநாளாக அனுஷ்டித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்