கொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption 257 அடி ஆழத்துக்கு வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தகவல்

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீதொட்டுமூல்ல குப்பைமேடு சரிந்த விழுந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த எதிர்பாராத விபத்து கொலன்னாவ பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை NUWAN BOPAGE/FACEBOOK
Image caption காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 50 குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை NUWAN BOPAGE/FACEBOOK
Image caption தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விபத்து

குப்பைமேடு சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீஸ் மற்றும் முப்படையினரின் உதவிகள் நாடப்பட்டிருந்தாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குப்பை மேட்டில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினருக்கு உதவியாக இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகாப்டர் உதவியும் பெறப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES
Image caption சரிந்த குப்பை மேட்டுக்குள் வீடுகள்

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தற்போது அந்த பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அமைச்சுக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இதேபோன்று குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் 113 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்