குப்பைமேட்டில் புதையுண்டவர்களை தேடும் பணியில் முப்படை; பலி 25 ஆக உயர்வு

இலங்கையில் கொழும்பு மாவட்டம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

மீட்புப்பணி

போலீஸ், முப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த சுமார் 1000 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 25 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை இரவு வரை 20 மரணங்கள் பதிவாகியிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமையும் சடலங்கள் மீட்பு பணியாளர்களினால் மீட்கப்பட்டதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடடைகள் சேதம் தொடர்பாக 5 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை முன் வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பேரிடர் முகாமைத்துவ அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை நிதி கட்டுப்பாடு இன்றி வழங்குமாறும் ஜனாதிபதி தனது உத்தரவில் குறிப்பிடடுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.

அந்த பகுதியில் அபாயம் நிலவும் இடங்களிலுள்ள குடியிருப்பாளர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே, இந்த குப்பைமேடு தொடர்பாக பிரதேச மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். சாலையில் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் பின்புலமே பிரதான தடையாக இருப்பதாக சமூக ஆர்வலர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்