காணிகள் விடுவிப்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே முக்கிய முடிவு

மன்னார், முல்லைத்தீவு, யாழ்பபாணம் ஆகிய வடபகுதி மாவட்டங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையிலான கூட்டங்களில் பேச்சுக்கள் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்த்தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை
படக்குறிப்பு,

தமிழ் தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை

தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட ராணுவத்தின் முக்கிய தளபதிகளுக்கும் இடையில் இன்று திங்களன்று கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராமத்தில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகள், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலேயே இந்த உயர் மட்டச் சந்திப்பின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்புக்கு முன்னோடியாக, இரு தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வடக்கில் தமது காணிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் எனக்கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருவது குறித்து எடுத்துரைத்து, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

அப்போது பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஏற்கனவே தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள போதிலும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் விடுத்திருந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என்றும் இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி தம்மிடம் கவலை வெளியிட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மேற்கோள்காட்டி, ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் பாதுகாப்புத் தரப்பினருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சுக்கள் நடத்துவதனால், பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு படைத்தரப்பினருக்குத் தெரிவிப்பதாக ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்திருந்ததாகவும் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியுடனான அந்தச் சந்திப்பின் பின்னரே, திங்களன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்பொலிக் குறிப்பு,

காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தது என்ன? இரா. சம்பந்தன் பேட்டி

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டம் 19- ஆம் தேதியும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையிலான கூட்டங்கள் 20-ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, மீண்டும் கொழும்பில் கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையில் அடுத்த கட்ட பேச்சுக்கள் நடைபெறம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அந்த ஊர் மக்கள் 47 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். மன்னார் முள்ளிக்குளம் மக்கள் கடந்த 25 நாட்களாகத் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்