குப்பைமேடு விபத்து: மீட்புப்பணிகள் 72 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் - ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே இடம்பெற்ற குப்பை மேடு சரிந்த விபத்தின் பின்னர் அந்த பகுதியில் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மீட்புப்பணிகள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வர எதிர்பார்ப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.

ஒரு வார காலம் வியட்னாம் நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடு திரும்பினார்

நாடு திரும்பிய அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த அனர்த்தம் தொடர்பான கலந்துரையாலொன்றிலும் கலந்து கொண்டார்.

கொலன்னாவ பிரதேசத்திற்கு சென்றிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சம்பவம் நடந்த இடத்தையும் சேதங்களையும் பார்வையிட்ட பின்னர் பாதிப்புக்குள்ளான மக்களையும் சந்தித்தார்.

அந்த பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற மீட்பு பணிகள் தொடர்வாகவும் படை மற்றும் சிவில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்

''இருப்பிடங்களை இழந்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாற்றுக்குடியிருப்புகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கிடைக்கும் '' என செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

குப்பைமேட்டில் புதையுண்டவர்களை தேடும் பணியில் முப்படை

"நாடு தழுவியதாக குப்பை மற்றும் கழிவுகள் தொடர்பான மீள் சுழற்சிற்கான அவசர திட்டம் தேவை " என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்த அனர்த்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 32 பேர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 8 பேர் என பேரிடர் முகாமைத்துவ அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

குப்பை சரிவு மற்றும் இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என கருதப்படும் ஏனையோரை தேடும் பணிகள் 6 வது நாளாகவும் தொடருகின்றன.

இந்த அனர்த்தம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை உரிய அமைச்சர்கள் , அதிகாரிகளுடன் மீண்டும் கலந்துரையாடினார்.

பேரிடர் முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,முப் படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதே கொலன்னாவ பிரதேசத்திலுள்ள மீதொட்டுமூல்ல குப்பை மேட்டில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதால் கொழும்பு மாநகர பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை நிர்வாகம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

தற்காலிகமாக இரு வாரங்களுக்கு தொம்பே மற்றும் பிலியந்தல பிரதேசங்களிலுள்ள இரு திண்ம கழிவு அகற்றும் மையங்களில் குப்பைகளை ஒப்படைக்க பேரிடர் முகாமைத்துவ அமைச்சில் இடம் பெற்றிருந்த கூட்மொன்றில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு மாநகர பிரதேசத்திலிருந்து குப்பைகள் அந்த இடங்களுக்கு கொண்டு வரப்படுவதற்கு அந்த பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை தொம்பே பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பிலியந்தல பிரதேச கரதியான பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்ம கழிவு அகற்று மையத்தில் நாளொன்றுக்கு 350 மெட்ரிக் டன் குப்பைகளை இம் மாதம் 28ம் தேதிவரை கொட்டுவதற்கு அனுமதிக்குமாறு தின்ம கழிவு அகற்றும் அதிகார வாரியத்திற்கு கெஸ்பாவ நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளுர் மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீத்தொட்டமுல்லையில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்