சிவில் பாதுகாப்பு திணைக்களப் பண்ணைகளை வடமாகாண சபை கோருவதற்கு எதிர்ப்பு

  • 24 ஏப்ரல் 2017

கிளிநொச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணைகளை, அந்தத் திணைக்களத்திடமிருந்து பறிக்க வேண்டாம் எனக் கோரி கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை அதிகமாகக் கொண்ட சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு பண்ணைகளை வடமாகாண விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என்றும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளை வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைத்து நிர்வகிக்க வேண்டும் என்றும், ராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனான சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் கோரப்பட்டிருக்கின்ற நிலையிலேயே சிவில் பாதுகாப்புப் படையணியைச் சேர்ந்தவர்களினால் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டு கோஷங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.

சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பெருமளவிலும், அவர்களுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ராணுவத்தினரால் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவில் பாதுகாப்புப் படையினருக்கு ராணுவத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற பண்ணைகளில் பண்ணைத்தொழிலில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான இந்தப் பண்ணைகளில் ராணுவத்தினர் முகாமிட்டு நிலைகொண்டிருப்பதுடன், சிவில் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி விவசாய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணியாளர் ஒருவருக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது.

இதனிடையே, ராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட யுவதிகள் முன்பு பள்ளி ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டு, ராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட முன்பள்ளிகளில் ஆசிரியைகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

கிளிநொச்சி ஏ9 வீதியின் டிப்போ சந்தியில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கிளிநொச்சி அரச செயலகத்தைச் சென்றடைந்து, கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் சிவில் பாதுகாப்புப் படையணியினரின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இது விடயம் சம்பந்தமாக, திங்களன்று பாதுகாப்பு அமைச்சில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட போது, ராணுவத்தின் கீழ் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற பண்ணைகளை விவசாய அமைச்சிடம் கையளித்தாலும், முன்பள்ளிகளைக் கல்வி அமைச்சிடம் கையளித்தாலும், சிவில் பாதுகாப்புப் பிரிவில் உள்ள 11 ஆயிரம் முன்னாள் போராளிகளும், மூவாயிரம் முன்பள்ளி ஆசிரியைகளும் வேலை இழக்க நேரிடும் என்ற காரணத்தினால் அவற்றை அவ்வாறு வடமாகாண சபையிடம் கையளிக்க முடியாது என மறுத்திருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கரிநாளாக கடைபிடிக்கப்பட்ட தமிழர் புத்தாண்டு தினம்

முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர் தற்கொலை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்