மன்னாரில் கடற்படையிடமிருந்த பொதுமக்களின் காணிகள் திரும்ப கையளிப்பு

  • 29 ஏப்ரல் 2017

மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தின் பொதுமக்களுடைய காணிகளை கடற்படையினர் சனியன்று ஊர் மக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உள்ளிட்ட மதகுருக்கள் அடங்கிய கூட்டத்தில் கையளித்திருக்கின்றனர்.

Image caption 38 நாள் போராட்டத்திற்கு பின் காணிகளை பெற்ற மன்னார் மக்கள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் காணி கையளிப்பு நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உடனடியாக 25 - 30 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமையே குடியேறவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆயினும் கடற்படையினர் பொதுமக்களுக்குச் சொந்தமான 22 வீடுகளில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கான மாற்று வசதிகள் செய்யப்பட்டதும் 6 மாத காலத்தில் அந்த வீடுகளையும் அவர்கள் கையளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள போதிலும், தற்போது 25 - 30 குடும்பங்களே மீள்குடியேறும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய குடும்பங்கள் படிப்படியாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மீள்குடியேறுகின்ற குடும்பங்களுக்கென உடனடியாக 80 தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்திருக்கின்றார்.

மீள்குடியேறும் மக்கள் தமது மீன்பிடி தொழிலையும் விவசாய முயற்சிகளையும் மேற்கொள்வது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தப் பிரதேசத்தின் கடற்படைத்தளபதி மற்றும் ஊர் மக்கள் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் காணிகள் விடுவிக்கப்படுவதாக கடற்படையினர் அறிவித்துள்ளதையடுத்து, காணி விடுவிப்புக்காக கடந்த 38 தினங்களாக அந்த ஊர் மக்கள் நடத்தி வந்த போராட்டம் கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு

அம்பாரையில் பெளத்த வழிபாட்டு மையம் அமைக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்