முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை; நகரில் கடையடைப்பு

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றிற்கு காவல்துறையினர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதை கண்டித்து நகரில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுப்பூர்வமாக கடைப்பிடிக்குமாறும், அதற்காக முடிந்தளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு சிவில் அமைப்பின் முக்கியஸ்தராகிய எழில்ராஜன் முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தமைக்காக காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அத்துடன், அந்த நினைவிடத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களில் ஒரு தொகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு அவர் மேற்கொண்டிருந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும் என முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த காவல்துறையினர் அந்த நிகழ்வை நடத்தவிடாமல் இடைநிறுத்தல் உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.

இந்த நீதிமன்ற உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, எழில்ராஜன் ஒழுங்கு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

எனினும், முள்ளிவாய்க்கால் கிழக்கு தவிர்த்து ஏனைய இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு வடமாகாண சபையின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சபையின் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிட்டு இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

பொருத்தமான உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா?

ரகசிய தகவலைப் பரிமாறிய விவகாரம்: சர்ச்சையில் தலையிடுகிறார் புதின்

கார்த்தி சிதம்பரம்: சர்ச்சைகளின் மத்தியில்

82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா

காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்