இலங்கை நிலச்சரிவுகளில் இறந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன.

Image caption நிலச்சரிவு, வெள்ளச் சேதத்தில் உயிரிழப்பு அதிகரிக்கிறது.

அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 303 குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இக் குடும்பங்களில் 18 ஆயிரத்து 845 குடும்பங்களை சேர்ந்த 76 ஆயிரத்து 905 பேர் 368 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு 180 ஆக உயர்வு

மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பிந்திய தகவல்களின் அடிப்படையில் 180 ஆக அதிகரித்துள்ளது. 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். மேலும் 109 பேர் காயமுற்றுள்ளனர் .

.இரத்தினபுரி மாவட்டம - 77பேர் , களுத்துறை மாவட்டம - 54 பேர் மாத்தறை மாவட்டம் -24 பேர் காலி மாவட்டம் -12 பேர் அம்பாந்தோட்டை மாவட்டம் -05 பேர் . கேகாலை மாவட்டம் -04 பேர் மற்றும் கம்பகா மாவட்;ம் -04 பேர் என்ற எண்ணிக்கையில் 180 மரணங்களும் அறிக்கையிடப்பட்டுள்ளன..

களுத்துறை மாவட்டத்தில் 57 பேரும் , இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேரும் , மாத்தறை மாவட்டத்தில் 15 பேரும் மற்றும் காலி மாவட்டத்தில் 10 பேரும் என்ற எண்ணிக்கையில் 110 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.

Image caption ரத்தினபுரி மாவட்ட கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன

`திரும்ப வேண்டாம்` - முகாமைத்துவ மையம் வேண்டுகோள்

இதே வேளை வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் நீர் மட்டம் குறைந்திருந்தாலும். இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்களை இருப்பிடங்களுக்கு மீள திரும்ப வேண்டாம் என அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்கிழமையும் மீண்டும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டு இந்த வேண்டுகோளை அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் விடுத்துள்ளது.

இருப்பிடங்களுக்கு திரும்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை தற்போது தங்கியுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கியிருக்குமாறு அரசு பேரிடர் முகமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கடகிழமை இரத்தினபுரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். இம் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிவில் அதிகாரிகள் ,மற்றும் முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.