வவுனியா : 100வது நாளை எட்டிய காணாமல் ஆக்கபட்டோரை மீட்கக் கோரும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் எனக் கோரி 100 ஆவது நாளாக இன்று சனிக்கிழமை போராட்டம் நடத்தி வருகின்ற வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்கள், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் என கோரியிருக்கின்றன.

அத்துடன் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன.

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும். அவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனக் கோரி நடத்தப்பட்டு வருகின்ற போராட்டத்தின் 100 ஆவது நாளாகிய இன்று சனிக்கிழமை வவுனியாவில் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கத்தினர் இந்தப் பேரணியை நடத்தியிருந்தனர். இந்தப் பேரணியில் திருகோணமலை மாவட்ட சங்கத்தைச் சேர்ந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தினர், நல்லாட்சி அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையைத் தாங்கள் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டறிய உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சுழற்சி முறையிலான வவுனியா மாவட்ட அறவழிப் போராட்டத்தின் 100 ஆவது நாளையொட்டி நடைபெற்ற பேரணியுடன் கூடிய போராட்டத்தையொட்டி அமெரிக்காவிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

கோரிக்கைகள்

எமக்கு நீதியும், குற்றம் புரிந்தவர்களுக்கு சரியான தண்டனையும் தேவை. அது அமெரிக்காவினால் மட்டுமே முடியும்.

எமக்கு நிரந்தரமானதும், பாதுகாப்பான எதிர்காலம், நிரந்தர அரசியல் தீர்வு என்பன தேவை. அதனை அமெரிக்காவினால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும்.

அமெரிக்காவைத் தவிர வேறு எவரையும் நாங்கள் நம்பத் தயராக இல்லை.

தமிழர்களின் பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் வந்து எமது துயரம் படிந்த கதைகளைக் கேட்க வேண்டும்.

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்

சிறிலங்கா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்போது, பேச்சுவார்த்தை மேசையில் அனைத்தையும் அங்கே முன்வைக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு ராணுவரீதியான அணுகுமுறையே சரியானதாக இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக 1987 இந்தியப் படையெடுப்பும், அதுபோன்று 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் ராணுவ நடவடிக்கையுமே சிறிலங்கா அரசை அசைக்கக் கூடியதாக இருந்தது.

கிழக்குத் தீமோர், பொஸ்னியா, கோசோவா போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு அமெரிக்க பாதுகாப்பு கொடுக்க முடிந்தது என்றால், சிறிய நாடாகிய சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க முடியாது?

சிரியாவில் உள்ள மக்களுக்கு சிரியாவின் தலைவர் அசாத்திடம் இருந்து ரசாயன தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாக்க முடியம் என்றால், ஏன் அமெரிக்காவினால் தமிழர்களைப் பாதுகாக்க முடியாது?

அமெரிக்கா தமிழர் தாயகத்திற்கு வந்து எங்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அமெரிக்காவின் உதவி மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியும் எமக்குத் தேவை ஆகியவை அந்த கோரிக்கைகளில் அடங்கும்.

பிற செய்திகள்:

இந்திய அளவில் ட்ரெண்டாகும் கருணாநிதியின் பிறந்தநாள்

அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம்

சஹாரா பாலைவனம்: தாகத்திற்கு 44 பேர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்