இலங்கை: மூதூர் பாலியல் வன்முறை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு

இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைதான 6 சந்தேக நபர்களும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Image caption கிழக்கு மாகாணத்தில் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களினால் போலிஸாரிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டன

கடந்த 29- தேதியன்று அந்த பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக்கூடமொன்றில் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு சென்றிருந்த 6 - 8 வயதுடைய மூன்று மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளிக் கூட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அயல் பிரதேச நபர்கள் 6 பேர் போலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று திங்கட்கிழமை மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிவான் ஐ.எம். ரிஸ்வான் முன்னிலையில் 6 சந்தேக நபர்களும் மீண்டும் முன்னிலை படுத்தப்பட்ட வேளை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தேக நபர்களை தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சந்தேக நபருக்கு 4 பேர் பிணையாளிகளாக ஓப்பமிட வேண்டும். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை போலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் போன்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தின் பிணை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image caption கிழக்கு மாகாணத்தில் சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன

சந்தேக நபர்களில் 6-ஆவது நபராக முன்னிலைப் படுத்தப்பட்ட நபர் வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பியவர் என்ற ரீதியில் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஓப்படைக்குமாறு அந் நபருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை விசாரனை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மன்றில் மீண்டும் ஆஐராக வேண்டும் என சந்தேக நபர்களுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image caption கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

இதே வேளை குறித்த சம்பவத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் இரு ஒரு வார காலமாக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன .

இன்று திங்கட்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் சாலையோரத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்