வேலையற்ற இலங்கை பட்டதாரிகளுக்கு தீர்வு கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

  • 14 ஜூன் 2017

இலங்கையில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் அரச தொழில் தொடர்பான கோரிக்கைக்கு இதுவரை தீர்வுகள் கிட்டாத நிலையில் 100 நாட்களை தாண்டி போராட்டம் தொடர்கின்றது.

அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம் முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மத்திய மற்றும் மாகாண அரசு துறைகளில் தேர்வு இன்றி தொழில் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பட்டதாரிகளுக்கான தொழில் பெறும் தற்போதுள்ள 36 வயது உச்சவரம்பு 45 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

Image caption துயரம் தீர்க்குமா சதம்?

வயது மற்றும் பட்டம் பெற்ற சான்றிதழ் மூப்பு அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மூன்று மாதத்திற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் செயல்திறனற்ற செயல்பாடுகளே தங்களின் போராட்டம் முடிவின்றி தொடர அடிப்படை காரணம் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கூறுகின்றது.

கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில்கள் வெளியாகியிருந்தாலும் உரிய தரப்பினரிடமிருந்து உறுதியான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Image caption கிழக்கு மாகாண சபைக்கு முன்பாகவும் பட்டதாரிகள் போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் சுமார் 4000 வேலையற்ற பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்த அமைப்புகளின் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

மாகாணத்தில் 4000 ஆசிரியர் பணி வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உள் வாங்குவதன் மூலம் தங்களின் பிரச்சினைக்கு தீர்வை மாகாண சபையினால் காண முடியும் என வேலையற்ற பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கிழக்கு மாகாண பள்ளிகளில் கணிதம் , விஞ்ஞானம் , ஆங்கிலம் , வரலாறு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாட ரீதியான ஆசிரியர்களுக்கே கணிசமான வெற்றிடங்கள் காணப்படுவதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியுடைய பட்டதாரிகள் இல்லை என கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

90 சதவீதத்திற்கும் மேலான பட்டதாரிகள் கலைப் பட்டதாரிகள் என தங்களால் திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Image caption காத்திருப்பு முடிவுக்கு வருவது எப்போது?

மாகாணத்திலுள்ள அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் ஒரே தடவையில் தொழில் வழங்குவதற்கு மாகாண சபையில் நிதி வளமோ அல்லது பதவி வெற்றிடமோ இல்லை. அந்தளவுக்கு மாகாண சபைக்கு அதிகாரமும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது போன்று மத்திய அரசின் சிறப்பு திட்டமொன்றின் மூலம்தான் அது சாத்தியப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

இதே வேளை நேற்று முன் தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் 2000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் சிறப்பு திட்டம் தொடர்பான அறிவிப்பொன்று அடுத்த மாதம் வெளியிடப்படும் என வேலையில்லா பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற தொடர்புடைய செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்