இலங்கை : புதிய அரசியல் யாப்பு வேண்டாம்--பௌத்த மத சபைகள் ஒருமித்த குரல்

படத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA
Image caption கோப்புப்படம்

இலங்கையில் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் யாப்பு திருத்தமோ தேவையில்லை என அந்நாட்டிலுள்ள நான்கு பிரதான பௌத்த பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சபைகள் கூடி முடிவு செய்துள்ளன.

பிரதான பௌத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த மற்றும் அமரபுர உள்ளிட்ட பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் பெளத்த சபைகள் கண்டியில் கூடி எடுத்துள்ள இந்த தீர்மானம் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது முன் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு நாட்டில் இல்லாத பிரச்சனை ஒன்றை ஏற்படுத்துகின்ற விடயம் என பௌத்த பீடங்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

புதிய அரசியல் யாப்பு நாட்டுக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பை தொடர்ந்து பேணுவது பொருத்தமானதாக இருக்கும் என பௌத்த பீடங்களின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் விருப்பு வாக்கு முறை பொருத்தமற்றதாக இருப்பதாக பலரும் கருதுவதால் அதில் மட்டும் திருத்தம் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ''சைட்டம் " எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்திற்கும், அரசு விரைவாக தீர்வை காண வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை மாலை கூடிய பௌத்த பீடங்களின் தலைவர்கள் கூட்டத்தில் மற்றுமோர் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்