''இலங்கை சிறார்களில் 36% பேருக்கு போதிய ஊட்டசத்து இல்லை'': சுகாதார அமைச்சர் தகவல்

  • 8 ஜூலை 2017
Image caption அரசு பள்ளிகளில் இலவசமாக சத்துணவு முழு நாளும் கிடைப்பதில்லை.

இலங்கையிலுள்ள சிறார்களில் 36 சதவீதமானோர் ஊட்டசத்துன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கராவினால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன இதனை தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள மொத்த சிறார்களில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 288 பேர் ஊட்டசத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது பதிலில் குறிப்பிட்ட அமைச்சர் இந்த எண்ணிக்கை மொத்த சிறார்களில் 36.1 சதவீதம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சிறார்களின் ஊட்டச்சத்து தொடர்பாக 2016 ஆம் ஆண்டு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஊட்டச்சத்து குறைந்த சிறார்கள் என இனம் காணப்பட்டவர்களில் 2.43 லட்சம் பேர் வயதுக்கேற்ப நிறை இல்லாதவர்கள் என்று அவர் கூறினார்.

1.44 லட்சம் பேர் வயதுக்கேற்ப உடல் பருமன் கொண்டிராதவர்கள் என்றும், 1.77 லட்சம் பேர் உயரத்திற்கேற்ப உடல் பருமனை அடையாதவர்கள் என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான பொன். சற்சிவானந்தம், ''இதற்கான பொறுப்பை அரசுதான் ஏற்க வேண்டும்" என்றார்.

"சிறுவர் ஊட்டசத்துடன் தொடர்புடைய கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் சரியான முறையில் இதுகுறித்த ஆய்வுகளை முன்னெடுத்து பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை'' என்றும் அவர் கூறினார்.

''குறிப்பாக பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு ஊட்டசத்துமிக்க உணவுத் திட்டம் நடைமுறையின் கீழ் மத்திய அரசின் நிதி மற்றும் உலக உணவு திட்டத்தின் கீழ் போஷாக்கு உணவு வழங்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி மற்றும் உலக உணவுத் திட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் போன்ற காரணங்களினால் சரியான ஒழுங்கு முறையில் மாணவர்களுக்கு முழு நாளும் சத்துணவு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது.'' என்றார்.

எந்தவொரு திட்டமாக இருந்தாலும் உரிய இலக்கை அடையும் வகையில் சங்கிலி தொடராக இருக்க வேண்டும் என்றும், முறையான கண்காணிப்பு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கொரு தடவை ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் பொன். சற்சிவானந்தம் வலியுறுத்தினார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை போருக்கு பின்னரும் சிறுவர்கள் மத்தியில் ஊட்டசத்துஇன்மை பிரச்சினை இருப்பதாக கூறப்படுகின்றது.

" போருக்கு பின்னர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் சரியான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்தக் குடும்பத்திலுள்ள சிறுவர்கள் மட்டுமன்றி அந்த குடும்பமே ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினையை எதிர்கொள்கின்றது" என பொன். சற்சிவானந்தம் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்