பருத்தித்துறை துப்பாக்கிச்சூடு: 2 போலீசார் பணி இடைநீக்கம்

  • 10 ஜூலை 2017

பருத்தித்துறை பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை உரிய அனுமதியின்றி, களவாக மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தமது உத்தரவை மீறியதனால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் மணல் ஏற்றி வரவில்லை என கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவர், கோவிலுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததைக் கண்டித்து காவல்துறையினருடைய வாகனம் ஒன்று உறவினர்கள் மற்றும் ஊர் மக்களினால் கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறையில் உள்ள மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அங்கு சென்ற உறவினர்களும் ஊர் மக்களும் பருத்தித்துறை காவல் நிலையத்தின் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

காவல் துறையினருடைய அத்துமீறிய செயலைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விடயம் சட்டம் ஒழுங்கு அமைச்சருடைய கவனத்திற்கும் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதையடுத்தே இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

காவல்நிலையத்திற்கு எதிரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பருத்தித்துறையில் பதட்டம் ஏற்பட்டிருந்தது.

யாழ் நகரில் இருந்து மேலதிக காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் பருத்தித்துறைக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து பருத்தித்துறையில் நிலைமை சீரடைந்ததாகவும், திங்கட்கிழமை காலை அங்கு அமைதி நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையன விசாரணைகளை நடத்துவதற்காக காவல்துறையின் சிறப்பு குழுவொன்று பருத்தித்துறைக்கு அனுப்பபட்டுள்ளது.

அதேவேளை, திங்களன்று பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு இந்தச் சம்பவம் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்