பாலியல் தாக்குதல் நடத்திய கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினார் ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்

இலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த போலீஸ் கான்ஸ்டபிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.

கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் அந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் தடுப்பு முகாமில் பணியாற்றும் சந்தேக நபரான போலீஸ் கான்ஸ்டபிள் ஏற்கெனவே கைதாகி நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

இன்று, திங்கட்கிழமை நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேக நபரான போலீஸ் கான்ஸ்டபிளை பாதிக்கப்பட்ட இந்த பெண் அடையாளம் காட்டியதாக அந்தப் பெண்ணுக்கு சட்ட உதவிகளை வழங்கி வருகின்ற ஆர்.ஆர்.ரி சட்ட நிறுவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிராஸ் நூர்டின் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியான்மர் நாட்டை 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டவரில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொகுவல போலீஸில் புகார் கொடுத்தார். இதனையடுத்தே சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ்நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்

படகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ஆம் தேதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் இந்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா அகதிகள் அமைப்பின் கண்காணிப்பில் இலங்கையில் அவர்கள் தஞ்சம் பெற விரும்புகின்றார்கள். அகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகள் அமைப்பு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :