இலங்கையில் பாலிதின் பைகளுக்கு தடை: உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு

  • 13 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் தேதி முதல் பாலித்தீன் உற்பத்தி பொருட்களை பயன்படுத்த தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக இலங்கை பாலிதின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் அனுரா விஜேதுங்க, இந்த தீர்மானத்தை மீண்டும் மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் தேதி முதல் பாலிதின் பைகள், பிளாஸ்டிக் பேட்டிகள், கோப்பைகள், தட்டுகள் ஆகியவை இறக்குமதி செய்வது மற்றும் பயன்படுத்துவதற்கு தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன முன்வைத்த யோசனை ஒன்றுக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை FERENC ISZA

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாலிதின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனுரா விஜேதுங்க, பாலிதின் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் மாசடைவதை தாங்கள் ஏற்றுகொள்வதாக கூறினார்.

ஆனால், பாலிதின் பயன்பாட்டின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் திட்டமொன்றை நடைமுறைபடுத்துவது குறித்து தனது சங்கம் ஆராய்ந்து வருவதாகவும், இந்நேரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை MUNIR UZ ZAMAN

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பாலிதின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் தொழில்களை இழப்பார்கள் என்று கூறிய அவர், இதனால் ஆயிரக்கணக்கான ஹோட்டல் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

எனவே இந்த தீர்மானத்தை மீளாய்வு செய்து பாலிதின் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ளோரின் தொழில்களை பாதுகாத்து தருமாறு அந்த சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்