தென் கொரியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் வெளியேற கால அவகாசம்

  • 14 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தென் கொரியா தலைநகர் சோலில் உள்ள அரச அரண்மனை

தென் கொரியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற தென் கொரியா அரசாங்கத்தினால் மூன்று மாத பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் சட்ட ரீதியாக தொழில் வாய்ப்பு பெற்று ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் தொடர்பாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜுலை 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் நடைமுறையிலிருக்கும் என தென் கொரியா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் சுமார் 26 ஆயிரம் இலங்கை பிரஜைகள் தொழில் புரிவதாக அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதரக அலுவலகம் கூறுகின்றது.

சுமார் 3000 பேர் வரை சட்ட விரோதமாக தங்கியிருந்து தொழில் புரிவதாகவும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

Image caption சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் நாடு திரும்ப வேண்டும்: அமைச்சர் தலதா அத்துக்கோறள

தென் கொரியா இலங்கையிடம் சட்ட ரீதியாக வேலை வாய்ப்புக்கு ஆட்களை கோரும் போது, சட்ட விரோதமாக தங்கியிருப்போர் தொடர்பாகவும் கவனம் செலுத்துவதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என இலங்கை அரசும் வலியுறுத்துகின்றது.

இந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களை நாடு திரும்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கேட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் மீண்டும் நாடு திரும்புவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்