யாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவம் - சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடம்
யாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாபதுகாவலர் ஒருவர் மரணம் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளதாக யாழ் வைத்திசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூட்டுச் சம்பவத்தின்போது வயிற்றில் படுகாயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த சார்ஜன்ட் தரத்திலானவரே உயிரிழ்ந்தவாராவார்.
இதேவேளை, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதலையடுத்து, சூட்டுச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை சார்ஜன்டிடம் இருந்து அபகரித்து சூடு நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும், அதற்குரிய மகசினும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வழமைபோல நல்லூர் ஆலயப் பின்வீதி வழியாகக் காரில் சென்றபோது நடைபெற்ற இந்த சூட்டுச் சம்பவமானது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகக் கருதுவதாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இந்தச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலும் காரிலும் மெய்ப்பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை எவருக்கும் இருந்ததில்லை என நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மிகவும் குறுகிய தூர இடைவெளியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
வடமாகாண சட்டத்தரணிகளும் நீதித்துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்;தில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்த இந்தத் துப்பாக்கி;ப் பிரயோக சம்பவம் தொடர்பில் யாழ் காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்