கிழக்கு மாகாணத்திலும் நீதிமன்ற பணிகள் முடக்கம்

இலங்கையில், யாழ்மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில், சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பிலும் ஆர்பாட்டங்ளிலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் ஆர்பாட்டம்.

இதன் காரணமாக நீதிமன்ற பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு , கல்முனை , அக்கரைப்பற்று , திருகோணமலை உள்ளிட்ட அநேகமான நீதிமன்றங்களில் இன்று திங்கட்கிழமை நடைபெற விருந்த வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒன்று கூடிய சட்டத்தரணிகள் சம்பவத்தை கண்டித்து ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்:

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்திலுள்ள சாலையொன்றின் வழியாக மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சட்டத்தரணிகள் சங்கங்கள் இன்று திங்கட்கிழமை கூடி ஆராயந்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சம்பவம் தொடர்பான குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தல் உள்ளிட்ட அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

படக்குறிப்பு,

திருகோணமலையிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் பதில் தலைவர் எப்.எம்.ஏ. அன்சார் மௌலானா "வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் அனைத்து நீதிபதிகளுக்கும் உச்ச பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்." என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :