யாழ் துப்பாக்கி சூடு: பக்கசார்பற்ற விசாரணை கோரி வடமாகாண சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ளார்.

யாழ் சூட்டுச் சம்பவம்: பக்கசார்பற்ற விசாரணை கோரி வடமாகாண சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு

இதேவேளை, நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள வடமாகாண சட்டத்தரணிகள், அந்த சம்பவத்திற்கு பக்கசார்பற்ற விசாரணையைக் கோரி, இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் கொலை வழக்கை, யாழ்ப்பாணத்தில் விசாரணை செய்யும் ’ட்ரையல் எட் பார்’ விசாரணை மாத்திரம் நடைபெற்றது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நடத்தப்படுகின்ற இந்த வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி, அதில் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் மட்டும் பணியில் ஈடுபடுவதற்கு தாங்கள் தீர்மானித்திருந்ததாக யாழ் சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், யாழ் சூட்டுச் சம்பவம்: பக்கசார்பற்ற விசாரணை கோரி வ

வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் காலையில் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து, நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி தாங்கள் வெளிநடப்பு செய்வதாகக் கூறி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர்.

வடமாகாண தனியார் பேருந்து உரிமையளார்கள் சங்கமும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. இதனால் வடமாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்:

இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ள அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் தனித்தனியே கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

நாட்டின் பிரதமரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன், தென்பகுதியில் உள்ள அரசியல் கட்சிகள் சிலவும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளன. கண்டியில் உள்ள பௌத்த மத பீடமாகிய மல்வத்து பீடமும் இந்த சம்பவத்தை நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் குறிப்பிட்டு கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நல்லூர் பின்வீதி வழியாக நீதிபதி இளஞ்செழியன் காரில் பயணம் செய்தபோது இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவமானது, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவம் நடைபெற்ற வேளை, அந்த இடத்தில் முச்சக்கர வண்டி தொடர்பான ஒரு தகராறில் மூவர் மதுபோதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் அங்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும், அப்போது அந்த நாற் சந்தியில் நீதிபதியின் வாகனத்திற்கு வழியேற்படுத்துவதற்காகச் செயற்பட்ட காவல்துறை சார்ஜன்ட்டின் கைத்துப்பாக்கியைப் பறித்து ஒருவர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் இந்தத் தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் நீதிபதி இளஞ்செழியனும் ஏனையோரும் இந்தத் தாக்குதல் நீதிபதி இளஞ்செழியனை நோக்கியே நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக அவருடைய இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஏற்கனவே இருவர்; இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

துப்பக்கியைப் பறித்தெடுத்து தாக்குதல் நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவரைக் கைது செய்வதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தினால் வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பு இன்னும் தணியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :