இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் அவரது செயலாளர் ஒஸ்ரின் ஃபெர்ணான்டோ இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையில், பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் மற்றும் வாயு பொருட்களை வழங்குதல், விநியோகம் செய்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களிலுள்ள கொள்கலன்களிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருட்களை வெளியேற்றுதல், எடுத்து செல்லல், விநியோகம் உள்ளிட்ட பணிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பணிக்கு திரும்பாதவர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது.
எரிபொருள் விநியோக பணிகளுக்கு முப்படையினர் உதவி
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதையடுத்து நள்ளிரவு நேரம் கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையின் பிரதான நுழைவாயிலை போலீஸார் திறக்க சென்றிருந்த வேளை அங்கு அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது. ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளேயிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுதையடுத்து எரிபொருள் விநியோக பணிகளுக்கு முப்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.
ராணுவ பாதுகாப்பு
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய தொகுதிக்கு போலீஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் களஞ்சிய சாலைகளிலிருந்து வவுசர்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை ராணுவ உதவியுடன் எரிபொருள் விநியோகம் கொலன்னாவ பிரதான களஞ்சியத்திலிருந்து ஆரம்பமான வேளை பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த இடத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை முறிடிக்கும் வகையில் கலகம் அடக்கும் போலீஸார் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான நுழைவாயில் முன்பாக எரிபொருள் வவுசர்கள் நிறுத்தப்பட்டு டயர்களிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு தமது பணியாளர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புறக்கணிப்பை கைவிடுங்கள் - சிறிசேன கோரிக்கை
பணி புறக்கணிப்பில் ஈடுபடாத பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எரிபொருள் விநியோக பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக ராணுவ ஊடகப்பிரிவு கூறுகின்றது.
பட மூலாதாரம், Getty Images
பணிப் புறக்கணிப்பை கைவிடுங்கள் - சிறிசேன கோரிக்கை
பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பொது மக்கள் நலன் கருதி பணிப் புறக்கணிப்பை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு தொடக்கம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகமும் தடைப்பட்டது.
பணியாளர்களின் கோரிக்கைகள் என்னென்ன?
திருகோணமலை சீனன்குடாவிலுள்ள எண்ணெய் தாங்கிகள் முழுமையாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
அம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வொன்று காணப்பட வேண்டும்.
சவுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையம் முழுமையாக நவீனமயப்படுத்தப்பட வேண்டும்
கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி இந்த கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை அரசினால் வழங்கப்பட்ட இதுதொடர்பான உறுதி மொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என பெட்ரோலிய துறை சார்ந்த பணியாளர்கள் கூட்டுத் தொழிற்சங்கம் கூறுகிறது.
ஏற்கனவே திருகோணமலை சீனன்குடாவிலுள்ள தாங்கிகளில் ஒரு தொகுதி இந்திய ஆயில் கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள தாங்கிகள் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பெட்ரோலிய துறை சார்ந்த பணியாளர்கள் தொழிற்சங்கங்களினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்