இலங்கை: முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்கள் தேவையென வலியுறுத்தல்

இலங்கையில் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியராக அல்லது விதவைகளாக இருந்தாலும் திருமணத்திற்கு அவர்களின் சம்மதம் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் கூறுகின்றது.

இலங்கை: முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்கள் தேவை என வலியுறுத்தல்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை முன் வைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமயிலான குழுவொன்று நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ அக்குழுவிடம் முன் வைத்துள்ள பரிந்துரைகளில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

"தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்ணின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது உறுதியாக குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் நடைபெற்றால் அதனை செல்லுபடியற்றதாக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் . " என்றும் ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ முன் வைத்துள்ள யோசனைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

''முஸ்லிம் பெண்களின் திருமண விடயத்தில் வயது எல்லை விதிக்கப்படுவதற்கு பதிலாக இஸ்லாம் வலியுறுத்தும் நிலைப்பாடொன்று விதிக்கப்பட வேண்டும்.'' என்கின்றார் ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ தலைவர் எம்.எஸ்.எம். ரஸ்மின்.

பிற இலங்கை செய்திகள்:

பெண் பருவ வயது அடைந்தவராக இருத்தல், பெண்ணின் சம்மதம் பெறுதல், பெண்ணுக்கு பொறுப்பானவர் கண்டிப்பாக சமூகமளித்தல், திருமணத்திற்குரிய உடலியல் தேவைகள் மற்றும் குடும்ப வாழக்கைக்கு தகுதியானவர் என்பது பெண்ணின் பொறுப்பாளர்களினால் உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களை கொண்டதாக அந்த நிலைப்பாடு இருக்க வேண்டுமென்பதை முன் மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சில முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் பெண்கள் காதி ( Quazi) நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பி வருகின்ற நிலையில் அதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனவே முஸ்லிம் பெண்கள் விவாக பதிவாளர்களாகவே, காதிகள் சபை ( Board of Quazi) அங்கத்தவர்களாகவே நியமிக்கப்பட கூடாது.

முஸ்லிம் தனியார் சட்ட விவாகத்தின் போது சாட்சிகளாக கையொப்பமிடும் இருவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

தற்போதுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் 12 வயதுக்கு குறைந்த பெண்ணின் திருமணத்திக்கு காதி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என கூறுகின்றது. 12 வயது திருமணம் உள்நாட்டில் குற்றவியல் சட்டத்திற்கு முரணாக இது காணப்படுவதால் இந்த விடயத்தில் கலந்துரையாடல் மூலம் தீர்மானமொன்றுக்கு வர வேண்டும். இல்லையேல் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

பலதார திருமணத்தின் போது குறித்த நபர் தனது முன்னைய மனைவிகளுக்கும் அறிவிக்க வேண்டும். மனைவியர்களுக்கு வாழ்வாதாரம், சொத்துரிமை, பாகப்பிரிவினை அனைத்தும் எழுத்து மூலம் வழங்கப்பட வேண்டும்.

முத்தலாக் முறையில் மூன்று தலாக்களையும் ஓரே முறையில் கூறுவது தடுக்கப்பட்டு மூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். ''தலாக்'' ( ஆண் விவாக ரத்து ) கூறும் போது பாதிக்கப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய விடயங்கள் உள்ளிட்ட 13 பரிந்துரைகள் உத்தேச முஸ்லிம் தனியார் திருத்த சட்டம் தொடர்பாக ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ தினால் முன் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முஸ்லிம் பெண்களின் இளவயது திருமண வயது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஓன்றியம் உள்ளிட்ட சர்வ தேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பாக உள்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் பொதுவாக குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து GSP + வரிச்சலுகையை பெறுவதற்காகவே முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் முற்படுவதாக ’ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்’ குற்றச்சாட்டை முன் வைத்து ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் தேவை; அந்த அடிப்படையில் தான் சில விதந்துரைகளை தாங்கள் முன் வைத்துள்ளதாக கூறுகின்றார் ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் தலைவர் எம்.எஸ்.எம். ரஸ்மின் .

ஐரோப்பிய ஓன்றியத்தின் தேவைக்காக அதாவது GSP + சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படுவதற்கு எதிராகவே அவ்வேளை தாங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாவும் அவர் தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :