இலங்கை: காட்டு விலங்குகளுக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் அறிமுகம்

  • 30 ஜூலை 2017
வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காட்டு மிருகங்கள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அண்மைக் காலமாக வருகை தரத் தொடங்கியிருக்கின்றன.
Image caption வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காட்டு மிருகங்கள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அண்மைக் காலமாக வருகை தரத் தொடங்கியிருக்கின்றன.

இலங்கையில் வறட்சியான கால நிலை நீடித்து வரும் நிலையில் மனிதர்களை போன்று மிருகங்களுக்கும் குடி நீர் கிடைக்கும் வகையிலான முன் மாதிரியான வேலைத்திட்டமொன்று புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக நாடு முழுவதும் 3 இலட்சத்து 14 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 10 இலட்சத்து 94 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ அமைச்சகம் கூறுகின்றது.

நீடித்து வரும் வறட்சியான கால நிலை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. குளங்களும் கிணறுகளும் நீர் வற்றி காணப்படுவதால் அநேகமான இடங்களில் குடிநீர் பிரச்சினையை மக்கள் எதிர்கொள்கின்றனர். அரசினால் குடிநீர் விநியோகம் இடம் பெற்றாலும் அது மக்களின் தேவைக்கு போதுமனதாக இல்லை என கூறப்படுகின்றது.

பொது மக்களை போன்று காட்டு மிருகங்களும் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் நிலையில் புத்தளம் மாவட்டம் நகவத்தேகம பிரதேசத்தில் காட்டு மிருகங்களுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தில் மட்டும் 34 குளங்கள் முழுமையாக வற்றி போயுள்ளன.காட்டு மிருகங்கள் நீர் தேடி மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அண்மைக் காலமாக வருகை தரத் தொடங்கியிருந்ததாக உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் தேடி அலையும் காட்டு விலங்குகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் குளங்களை அண்மித்த பகுதியில் தகர மற்றும் பிளாஸ்ரிக் பரல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டு வவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு நீர் வழங்கப்படுகின்றது.

Image caption காட்டு மிருகங்களுக்கு நீர் கிடைக்கும் வகையில் குளங்களை அண்மித்த பகுதியில் தகர மற்றும் பிளாஸ்ரிக் பரல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் நீர் ஊற்றி வைக்கப்படுகின்றன.

நவகத்தேகம பிரதேச செயலகம் ''ஆனைமடுவ நாம் " என்ற உள்ளுர் தன்னார்வ தொண்டர் அமைப்பும் இணைந்ததாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது.

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் 37 ஆயிரம் குடும்பங்களை கொண்ட1 இலட்சத்து 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் வடக்கு , கிழக்கு , வட மத்தி மற்றும் வட மேல் மாகாணங்களிலே கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் 1 இலட்சத்து 34 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 63 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 55 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 12 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை கொண்ட வட மேல் மாகாணத்தில் 83 ஆயிரம் குடுமபங்களை சேர்ந்த 2 இலட்சத்து 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் , பொலநறுவ மாவட்டங்களை உள்ளடக்கிய வட மத்திய மாகாணத்தில் 24 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்