இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள்

  • 31 ஜூலை 2017

வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த இறப்புக்கள் இடம்பெற்று தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், உறவினர்களிடம் இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை; இதன் காரணமாக உறவினர்கள் இறந்தோர் சம்பந்தமாக செயல்படும் போது சட்ட சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

இதன் காரணமாக இறந்தோருக்கு அரசாங்கத்தினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நஷ்டஈடை பெறுவதற்கும் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுதேஷ் நந்திமால் டி சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாமை குறித்து அரச பதிவாளர் திணைக்களத்தின் கருத்துக்களை பெற முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.

பிற இலங்கை செய்திகள்:

இதேவேளை வெலிக்கடை தாக்குதல் சம்பந்தமாக ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், விசாரணைகள் நடைபெற்றுவரும் முறை குறித்து திருப்தியடைய முடியாதென்று சுதேஷ் நந்திமால் சில்வா குற்றம்சாட்டினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த்த் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய முக்கிய நபர்கள் என்று தெரிவிக்கப்பட்டும், முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் கொடிப்பிலி, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் போலிஸ் அதிகாரி ரங்கஜீவ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் போலீசார் விசாரணைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்று கூறிய அவர், இதன் காரணமாக இறந்தோரின் உருவினர்களுக்கு விசாரணைகள் மீது பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த விசாரணைகளை மூடி மறைப்பதற்காகவே இறந்தோருக்கு நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

2012ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தேடுதலொன்றுக்காக சென்ற அரச பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்