வரியை உயர்த்திய பாகிஸ்தான்; கவலையில் இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள்

  • 3 ஆகஸ்ட் 2017
இலங்கை வெற்றிலை படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் அறவிடும் வரியை அதிகரித்துள்ள காரணத்தினால் தாங்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் இந்திக்க ராஜபக்ஷ, பாகிஸ்தான் தனது பாவனைக்காக பயன்படுத்தும் வெற்றிலைகளில் 80% இலங்கையிலிருந்தே இறக்குமதி செய்வதாக தெரிவித்தார்.

தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் அமல்படுத்திய வரி அதிகரிப்பு காரணமாக இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெற்றிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 30,000 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதன்மூலம் ரூபாய் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வொன்றை வழங்க வேண்டுமென்று இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வரத்தக அமைச்சகம், இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீன் இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தை தெளிவுபடுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி தூதவர் கூறியுள்ளதாகவும் அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்